டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலா பயணியை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கைது
டெல்லியில் அமெரிக்க சுற்றுலா பயணியை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி,
அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் வான்மீட்டர் என்பவர் இந்தியாவிற்கு சுற்றுலாவிற்காக கடந்த 18 ஆம் தேதி டெல்லி விமான நிலையம் வந்துள்ளார்.
தான் தங்குவதற்காக டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்த அவர் அந்த ஹோட்டலுக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுனர் ராம் ப்ரீத், வெளிநாட்டு பயணியிடம் தவறான தகவல்களை அளித்து பணம் பறிக்க எண்ணியுள்ளார். எனவே அந்த சுற்றுலா பயணியிடம் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் தான் அவரை மாற்று வழியில் அழைத்து செல்வதாகவும் கூறி இருக்கிறார்.
பின்னர் அவரை டெல்லி கோலெ மார்க்கெட் பகுதியில் உள்ள சுற்றுலா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த சுற்றுலா அதிகாரியும் அவருக்கு தவறான தகவல் அளித்து ஆக்ரா மற்றும் ஜெய்பூர் செல்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி 1,294 டாலர்கள் வாங்கியிருக்கிறார்.
ஆக்ராவிற்கு சென்ற பின்னர் அந்த சுற்றுலா பயணி தான் முன்பே பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது டெல்லிக்கு வரும் எந்த சாலையும் மாற்றப்படவில்லை என்று கூறியுள்ளனர். அதன் பிறகு தான் அந்த சுற்றுலா பயணி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக மந்திர் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் ராம் ப்ரீத் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் டெல்லியில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடன் இணைந்து அந்த சுற்றுலா பயணியை, ஒரு டாக்சி ஓட்டுனர் உட்பட மேலும் சில பேர் ஏமாற்றியதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இது போன்ற நபர்களால் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story