பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பு - ‘தேர்தல் டிக்கெட்’ வழங்கியதில் ஊழல் செய்ததால் தொண்டர்கள் ஆத்திரம்


பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பு - ‘தேர்தல் டிக்கெட்’ வழங்கியதில் ஊழல் செய்ததால் தொண்டர்கள் ஆத்திரம்
x
தினத்தந்தி 23 Oct 2019 3:00 AM IST (Updated: 23 Oct 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் 2 பேருக்கு தொண்டர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். கழுதை மீது ஏற்றி ஊர்வலம் நடத்தினர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு, அவர்கள் கூண்டோடு காங்கிரசில் இணைந்தனர்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் 2 பேரை அந்த கட்சி தொண்டர்களே அவமானப்படுத்திய சம்பவம் நேற்று நடந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கவுதம், மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் பொறுப்பாளர் சீதாராம் ஆகியோரின் முகத்தில் அந்த கட்சி தொண்டர்கள் கருப்பு மையை பூசினர்.

பின்னர், இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்தனர். ராம்ஜி கவுதமை ஒரு கழுதை மீது அமர வைத்தனர். அதே கோலத்தில், கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கட்சி தொண்டர்கள் சிலர் கூறியதாவது:-

நாங்கள் 5 ஆண்டுகளாக களப்பணியாற்றி வருகிறோம். ஆனால், தேர்தல் நேரத்தில், பிற கட்சிகளில் இருந்து வருபவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு கட்சி தலைவர்கள் ‘டிக்கெட்’ கொடுக்கின்றனர். தொண்டர்களும், பிரமுகர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர். அதனால் அதிருப்தி அடைந்துள்ளோம்.

நாங்கள் 3 தடவை ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், எங்கள் நிலைப்பாட்டை மாயாவதியிடம் தலைவர்கள் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு, ஆளும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

“இது ஒரு வெட்கக்கேடான செயல். காங்கிரஸ் கட்சி முதலில் குதிரை பேரத்தில் ஈடுபட்டது. தற்போது, எங்கள் கட்சி பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளது” என்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.


Next Story