மக்கள் தீபாவளி பரிசளித்துள்ளனர் -பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு


மக்கள் தீபாவளி பரிசளித்துள்ளனர் -பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 24 Oct 2019 2:34 PM GMT (Updated: 24 Oct 2019 2:37 PM GMT)

மக்கள் தீபாவளி பரிசளித்துள்ளனர் என்று பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

அரியானா, மராட்டிய சட்டமன்றத்துக்கு கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.  இதில், மராட்டியத்தில் ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணி மீண்டும் 158 இடங்களுக்கு மேல் வெற்றி முகத்துடன் உள்ளது. இதனால், மராட்டியத்தில் மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைகிறது.

அதேபோல், அரியானாவிலும், பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 90 இடங்களில் 40 இடங்களில் பாஜக வெற்றியை நோக்கி செல்கிறது.  காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி முகம் கண்டுள்ளது. அரியானாவில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பிரதமர் மோடிக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கட்சியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-  “மராட்டியம் மற்றும் அரியானா மாநில மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். தீபாவளி  பண்டிகைக்கு அரியானா மற்றும் மராட்டிய மக்கள் பரிசளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜகவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த வெற்றி. 

தேவேந்திர பட்னாவிஸும் மனோகர் லால் கட்டாரும் முதல் முறையாக முதல் மந்திரிகளாக இருந்தவர்கள். அவர்களுக்கு மந்திரிகளாக இருந்த அனுபவம் இருந்தது இல்லை. இருந்தாலும், 5 ஆண்டுகளாக  மக்கள் நலனுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக மக்கள் அவர்கள் மீது மீண்டும் தங்கள் நம்பிக்கையை  வைத்துள்ளனர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிகழ்வு குறைவாகவே நடப்பதால், அரியானாவில் கிடைத்த வெற்றியும் மிகச்சிறப்பான வெற்றியே” இவ்வாறு அவர் பேசினார்.

Next Story