அரியானாவில் தொங்கு சட்டசபை - துஷ்யந்த் சவுதாலா கட்சியுடன் சேர்ந்து பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி


அரியானாவில் தொங்கு சட்டசபை - துஷ்யந்த் சவுதாலா கட்சியுடன் சேர்ந்து பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி
x
தினத்தந்தி 24 Oct 2019 11:15 PM GMT (Updated: 24 Oct 2019 9:05 PM GMT)

அரியானா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை அமைகிறது. துஷ்யந்த் சவுதாலா கட்சியுடன் சேர்ந்து பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

சண்டிகார்,

முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வந்த அரியானா மாநிலத்தில் கடந்த 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.

இதில் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

அரியானா மாநிலத்தில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் உள்ள 90 இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் பாரதீய ஜனதா கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகத்தான் வர முடிந்தது. தனிப்பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் 15 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.

முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார், கர்னால் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தார்லோசான் சிங்கை 45 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

அதே நேரத்தில் மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுபாஷ் பராலா, டோகனா தொகுதியில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் தேவிந்தர் சிங்பாப்லி வெற்றி பெற்றார். இதே போன்று மனோகர் லால் கட்டார் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த 8 மந்திரிகள் தோல்வியை தழுவி உள்ளனர்.

இதையடுத்து சுபாஷ் பராலா, மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, சாம்ப்லா கிலோய் தொகுதியில் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் சதீஷ் நந்தாலை அவர் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

முன்னாள் முதல்-மந்திரி ஓ.பி. சவுதாலாவின் பேரனும், ஜனநாயக ஜனதா கட்சி தலைவருமான துஷ்யந்த் சவுதாலா, உசானாகலான் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் பிரேமலதாவை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்தார்.

இறுதி நிலவரம்

மொத்த இடங்கள் - 90
பாரதீய ஜனதா - 40
காங்கிரஸ் - 31
ஜனநாயக ஜனதா - 10
சுயேச்சைகள் - 7
மற்றவை - 2

அரியானாவில் தனிப் பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வந்துள்ள நிலையில் அடுத்த ஆட்சியை தீர்மானிக் கும் ‘கிங் மேக்கர்’ துஷ்யந்த் சவுதாலா ஆவார். இவரது கட்சியான ஜனநாயக ஜனதா 10 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

இவரது கட்சியுடன் சேர்ந்து பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாக அரியானாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அரியானாவில் தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக் கும்; காங்கிரஸ் படுதோல்வி அடையும் என கூறின.

ஆனால் அது பலிக்கவில்லை. பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாகத்தான் வந்துள்ளதே தவிர தனிப்பெரும்பான்மை பலம் பெறவில்லை. காங்கிரசின் பலமும் முந்தைய தேர்தலை விட இரு மடங்கை தாண்டிவிட்டது.


Next Story