அரியானா சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 2 பேரை டெல்லிக்கு அழைத்துச்சென்றது பாஜக !


அரியானா சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 2 பேரை  டெல்லிக்கு அழைத்துச்சென்றது பாஜக !
x
தினத்தந்தி 25 Oct 2019 1:18 AM GMT (Updated: 25 Oct 2019 1:18 AM GMT)

அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 8 சுயேச்சை எம்எல்ஏக்களில் இருவரை பாஜக எம்.பி. ஒருவர் டெல்லிக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சண்டிகார்,

முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வந்த அரியானா மாநிலத்தில் கடந்த 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

அரியானா மாநிலத்தில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் உள்ள 90 இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் பாரதீய ஜனதா கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகத்தான் வர முடிந்தது. தனிப்பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. 

இந்த நிலையில், அரியானாவில் சுயேச்சை எம்.எல்.ஏக்களான கோபால் கன்டா, ரஞ்சித் சிங் ஆகியோரை சிர்சா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சுனிதா துக்கல் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவரும், சிர்சா தொகுதியின் வளர்ச்சிக்கு பணியாற்றும் கட்சிக்கு ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்தனர். அவர்கள் இருவரும் பாஜகவுக்கு ஆதரவளிக்கப்போவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. 

Next Story