ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீர் சென்றது பாதுகாப்பு படையினர்-போராட்டக்காரர்கள் மோதல் நீடிப்பு


ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீர் சென்றது பாதுகாப்பு படையினர்-போராட்டக்காரர்கள் மோதல் நீடிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2019 11:15 PM GMT (Updated: 29 Oct 2019 10:52 PM GMT)

ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீருக்கு சென்றது. அதே சமயத்தில், அங்கு பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள கள நிலவரம் பற்றி அறிவதற்காக, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தனர்.

4 எம்.பி.க்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பிய நிலையில், 23 எம்.பி.க்கள் நேற்று காஷ்மீருக்கு சென்றனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டலுக்கு குண்டு துளைக்காத கார்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த கார்களுடன் பாதுகாப்பு படையினரின் கார்களும் சென்றன.

ஓட்டலில் அவர்களுக்கு காஷ்மீர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை ஓட்டலில் சந்தித்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் இதர பகுதிகளில் உள்ள நிலவரத்தை எடுத்துரைத்தனர். பொதுமக்களின் பிரதிநிதிகளும் ஐரோப்பிய எம்.பி.க்களை சந்தித்தனர்.

ஐரோப்பிய எம்.பி.க்கள் வந்த நாளிலும், காஷ்மீரில் மோதல் மற்றும் கடையடைப்பு சம்பவங்கள் நடந்தன. ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். மோதல் காரணமாக, சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.

ஸ்ரீநகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. அதே சமயத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று திட்டமிட்டபடி தொடங்கின. தேர்வு மையத்துக்கு வெளியே பெற்றோர் பீதியுடன் காத்திருந்தனர்.

இதற்கிடையே, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், இங்கிலாந்து லிபரல் ஜனநாயக கட்சி பிரமுகருமான கிறிஸ் டேவிஸ் என்பவர், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

காஷ்மீரை பார்வையிடும் குழுவில் எனக்கும் இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. காஷ்மீர் மக்களிடம் போலீஸ் துணையின்றி உரையாட வாய்ப்பு அளிக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு இந்திய அரசு சிறிய விளக்கத்துடன், எனக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றுக்கொண்டது.

காஷ்மீரில் நடப்பனவற்றை இந்திய அரசு மூடி மறைக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story