சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி


சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 30 Oct 2019 8:46 PM GMT (Updated: 30 Oct 2019 8:46 PM GMT)

என்ஜின் இணைப்பு சங்கிலி துண்டானதால் சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் புறப்பட்டு கொல்லங்கோடு அருகே 4 மணியளவில் வரும் போது, திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் ரெயிலின் வேகமும் தடைபட்டு பெட்டிகள் குலுங்கின. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

உடனே என்ஜின் டிரைவர் திரும்பி பார்த்த போது பெட்டிகள் மட்டும் தனியாக பிரிந்து நிற்பது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் என்ஜினை நிறுத்தி விட்டு இறங்கி சென்று பார்த்தார். அப்போது என்ஜினையும், ரெயில் பெட்டிகளையும் இணைக்கும் சங்கிலி உடைந்து துண்டாகி இருப்பது தெரிய வந்தது.

ரெயில் வேகமாக ஓடிய போது இணைப்பு சங்கிலி உடைந்து துண்டானாலும் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், ரெயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ரெயில் பெட்டிகளை என்ஜினோடு இணைக்கும் சங்கிலி திடீரென்று உடைந்து துண்டாக காரணம் என்ன? என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story