காஷ்மீரில் 5 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை - மம்தா பானர்ஜி கண்டனம்


காஷ்மீரில் 5 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை - மம்தா பானர்ஜி கண்டனம்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:00 PM GMT (Updated: 30 Oct 2019 9:34 PM GMT)

காஷ்மீரில் 5 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 தொழிலாளர்களும் மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

எனவே, இந்த கொலைக்கு மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில், “மனித குலத்தின் எதிரிகள், இந்த கோழைத்தனமான செயலை செய்துள்ளனர். வன்முறையை நாம் ஒதுக்க வேண்டும். கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இந்த கொடூரமான கொலையைப்பற்றி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காஷ்மீர் இருக்கும்போது, இச்சம்பவம் நடந்துள்ளது. உண்மையை வெளிக்கொணர தீவிர விசாரணை தேவை” என்று கூறியுள்ளார்.

சம்பவம் பற்றி நேரில் விசாரிப்பதற்காக, கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் சிங்கை காஷ்மீருக்கு மம்தா அனுப்பி வைத்துள்ளார். கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி அறிவித்துள்ளார்.

Next Story