அமலாக்கப்பிரிவு கோரிக்கை நிராகரிப்பு: ப.சிதம்பரத்துக்கு மீண்டும் நீதிமன்ற காவல் - தனிக்கோர்ட்டு உத்தரவு


அமலாக்கப்பிரிவு கோரிக்கை நிராகரிப்பு: ப.சிதம்பரத்துக்கு மீண்டும் நீதிமன்ற காவல் - தனிக்கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2019 11:15 PM GMT (Updated: 30 Oct 2019 10:07 PM GMT)

அமலாக்கப்பிரிவின் கோரிக்கையை நிராகரித்த தனிக்கோர்ட்டு, ப.சிதம்பரத்தை நவம்பர் 13-ந்தேதி வரை மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் கடந்த 22-ந்தேதி ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ந்தேதி கைது செய்தது. அமலாக்கப்பிரிவு வழக்கில் அவரை நேற்று (30-ந்தேதி) வரை காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.

அமலாக்கப்பிரிவு காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, ப.சிதம்பரம் நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ப.சிதம்பரம் கோர்ட்டு அறைக்கு வந்ததும், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அவரிடம் நலம் விசாரித்தனர்.

பின்னர் விசாரணை தொடங்கியதும் அமலாக்கப்பிரிவு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்துக்கு அமலாக்கப்பிரிவு காவலை மேலும் ஒரு நாளைக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் தரப்பு மூத்த வக்கீல் கபில் சிபல், கடந்த 14 நாட்களாக இவர்கள் ஒரு சாட்சியத்தைக் கூட ப.சிதம்பரத்தின் எதிரில் வைத்து விசாரிக்கவில்லை என்று கூறியதோடு, அவருக்கு மேலும் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாங்கள் பலருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறோம். விசாரணையில் கலந்து கொள்ள முடியாத வகையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கலாம்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அமலாக்கப்பிரிவு சார்பில், ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் சமீபத்திய மருத்துவ அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய்குமார் குஹர், ப.சிதம்பரத்தை மேலும் ஒரு நாள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு விடுத்த கோரிக்கையை நிராகரித்தார்.

அத்துடன் அவரை வருகிற நவம்பர் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் கோர்ட்டில் இருந்து மீண்டும் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கோர்ட்டில் இருந்து ப.சிதம்பரத்தை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்த போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழு காஷ்மீர் நிலவரம் பற்றி ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “அந்த குழுவினர் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு, அரசுக்கு ஆதரவாக கூட பேசலாம், யார் கண்டது?” என்று கிண்டலாக கூறினார்.

இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அமலாக்கப்பிரிவு வழக்கில் நவம்பர் 4-ந்தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “ப.சிதம்பரம் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுகிறார். 2017-ம் ஆண்டில் இருந்தே அவர் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை தற்போது போதிய பலன் அளிக்கவில்லை. இந்த நோய்க்கான சிகிச்சை ஏற்கனவே அவருக்கு ஐதராபாத்தில் உள்ள ‘ஆசியன் இன்ஸ்டிட்யூட் ஆப் கேஸ்ட்ரோ என்டராலஜி’ மருத்துவமனையில் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ப.சிதம்பரத்தின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரை அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் நவம்பர் 4-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

அமலாக்கப்பிரிவு வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நவம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


Next Story