சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிப்பு


சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2019 6:44 AM GMT (Updated: 31 Oct 2019 9:08 AM GMT)

சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் நிராகரித்தது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் கடந்த 21ந்தேதி ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16ந்தேதி கைது செய்தது.  தொடர்ந்து அவரது காவலை நீட்டிக்க கோரி கடந்த 24ந்தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையீடு செய்தது.

இதன்படி, ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை காவலை வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ப. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ப. சிதம்பரத்தின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு செய்துள்ளார்.  இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

கபில் சிபல் வாதிடும் போது  ப.சிதம்பரத்துக்கு உடல் அலர்ஜி நோய் மற்றும் வயிற்று வலி உள்ளது. உடல்நிலை பாதிப்பால் சிதம்பரத்தின் எடை 73 கிலோவில் இருந்து 66ஆக குறைந்து விட்டது . சிதம்பரம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு முறையான சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சைக்காக சிதம்பரம் ஐதராபாத் செல்ல 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்.    சிதம்பரத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினார்.

சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட சிதம்பரத்தின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் நிராகரித்தது.

Next Story