பிரணாப் முகர்ஜியை உளவு பார்க்க உத்தரவிட்டது யார்? - சோனியாவுக்கு, பா.ஜனதா கேள்வி


பிரணாப் முகர்ஜியை உளவு பார்க்க உத்தரவிட்டது யார்? - சோனியாவுக்கு, பா.ஜனதா கேள்வி
x
தினத்தந்தி 2 Nov 2019 8:56 PM GMT (Updated: 2019-11-03T02:26:25+05:30)

பிரணாப் முகர்ஜியை உளவு பார்க்க உத்தரவிட்டது யார் என சோனியாவுக்கு, பா.ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு இஸ்ரேலிய மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக குற்றம் சாட்டினார். இந்த செயல் சட்ட விரோதமானது என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சோனியா காந்திக்கு நேற்று பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் தளத்தில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், அப்போது மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜி, ராணுவ தளபதியாக இருந்த வி.கே.சிங் ஆகியோரை டெல்லி 10 ஜன்பத் சாலையில் (சோனியாவின் இல்லம்) இருந்தவாறு உளவு பார்த்தலுக்கு உத்தரவிட்டது யார்? என்பதையும் சோனியா காந்தி தெளிவுபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க நேர்மையற்ற பா.ஜனதா அரசு மறுப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குறிப்பிட்டு உள்ளார்.

Next Story