டெல்லியில் காற்று மாசு அபாயம்: பள்ளிகளுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு


டெல்லியில் காற்று மாசு அபாயம்: பள்ளிகளுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:26 AM GMT (Updated: 3 Nov 2019 10:26 AM GMT)

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு நவம்பர் 8-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கடுமையாக அதிகரித்துள்ளது.  அங்கு காணப்படும் மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஏராளமானோர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் தலைவலியால் அவதியடைந்துள்ளனர். பள்ளிகளுக்கு வரும் 5-ந் தேதி வரை விடுமுறை அறிவித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். 

மேலும், டெல்லியில், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அங்கு வரும் ஐந்தாம் தேதி வரை கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும், பட்டாசு மற்றும் மத்தாப்புகள் வெடிக்கவும் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

இந்நிலையில்  டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு நவம்பர் 8-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 8-ம் தேதி வரை மேலும் 3 நாட்கள் விடுமுறை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை பாதிப்பு

காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாணவர்களுக்கு முகமூடிகள் வழங்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. நாளை முதல் வாகன கட்டுப்பாடு விதிகளும் பின்பற்றப்படுகிறது. ஆனாலும், மாசடைந்த காற்றினால் டெல்லி முழுவதும் புகைசூழ்ந்து காணப்படுகிறது. இதனால், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோவுக்கு செல்லும் 32 ஏர் இந்தியா விமானங்கள் திருப்பி விடப்பட்டன. காற்று மாசு அதிகரிப்பதால், பொது சுகாதார அவசர நிலை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி

டெல்லியில் இன்று மாலை நடக்க இருக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 'டுவெண்டி-20' கிரிக்கெட் போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க, மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் மூலம் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியை காணவரும் ரசிகர்களும் சுவாச கவசத்தை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு  குறித்து முதல்-மந்திரி  அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அறிவியல் நிபுணர்களும், விஞ்ஞானிகளும் டெல்லி மாசுபாட்டிற்கு காரணம்  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய பொருட்களே என்று கூறுகின்றனர். இதில் நாங்கள் அரசியல் விளையாட்டு செய்யவில்லை. இந்த நிலையில் அரசியல் செய்யக்கூடாது.  அனைத்து அண்டை மாநில அரசுகளும் ஒன்றிணைந்து  இந்த பிரச்சினை குறித்து விவாதித்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story