பீகாரில் சாத் பூஜை கொண்டாட்டங்களில் 30 பேர் சாவு


பீகாரில் சாத் பூஜை கொண்டாட்டங்களில் 30 பேர் சாவு
x
தினத்தந்தி 3 Nov 2019 9:45 PM GMT (Updated: 3 Nov 2019 8:54 PM GMT)

பீகார் சாத் பூஜை கொண்டாட்டத்தின்போது சிறுவர்கள் உள்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாட்னா,

வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது பொதுமக்கள் வழக்கம். பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் பர்கான் கிராமத்தில் சாத் பூஜை நேற்று கொண்டாடப்பட்டது.

அங்கு கோவிலின் அருகே இருந்த குளத்தில் பொதுமக்கள் பூஜை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கோவிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இதேபோல், சமஸ்திபூர் மாவட்டம் கஜூரி கிராமத்தில் சாத் பூஜை கொண்டாட்டத்தின்போது குளத்தில் குளித்த ஒருவரும், பிர்கா கிராமத்தில் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், சராரி காத் பகுதியில் கங்கை ஆற்றில் குளித்த 16 வயது சிறுவனும் நீரில் மூழ்கி இறந்தார்.

பெகுசராய் மாவட்டத்தில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏராளமானோர் குளத்தில் இறங்கி பூஜை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் 4 பேர் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று 2 சிறுவர்களை மீட்டனர். மற்ற 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சாத் பூஜை கொண்டாட்டங்களின்போது குளத்தில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் சிறுவர்கள் உள்பட மேலும் 22 பேர் பலியானார்கள். இதனால் சாத் பூஜை கொண்டாட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.


Next Story