ஸ்ரீநகர் ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள்


ஸ்ரீநகர் ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 9:10 PM GMT)

காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கி விட்டதால், ஸ்ரீநகர் ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள்.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி ரத்து செய்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கைதான 34 தலைவர்கள் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் கரையில் உள்ள சென்டார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் ஆகும். கடந்த 3 மாதங்களாக அவர்கள் அங்கு தங்கி இருப்பதற்கான கட்டண தொகையான ரூ.2 கோடியே 65 லட்சத்தை செலுத்துமாறு உள்துறை அமைச்சகத்துக்கு ஓட்டல் நிர்வாகம் பில் அனுப்பி இருக்கிறது.

காஷ்மீரில் தற்போது குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலகட்டத்தில் ஸ்ரீநகரில் சில நாட்கள் வெப்பநிலை உறைபனி நிலைக்கும் கீழே சென்று விடும். இதனால் நிர்வாக வசதிக்காக, குளிர்காலத்தில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு மாற்றப்படுவது வழக்கம்.

கடும் குளிர் ஸ்ரீநகரில் உள்ள சென்டார் ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் தலைவர்களுக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அரசு கருதுகிறது.

இதனால் அந்த ஓட்டலில் இருக்கும் தலைவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்து உள்ளது. தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள ஓட்டலில் கடும் குளிரை சமாளிக்க போதிய வெப்பசாதன வசதிகள் இல்லாததால் வேறு இடங்களுக்கு அவர்கள் மாற்றப்படுவதாகவும், எந்தெந்த இடங்களுக்கு அவர்களை மாற்றுவது என்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீநகரில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story