டெல்லியில் சைக்கிளில் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்ற துணை முதல் மந்திரி
டெல்லியில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா அலுவலகத்திற்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
புதுடெல்லி,
டெல்லியில் காற்று மாசுபடுவதை குறைக்க கடந்த 2016-ம் ஆண்டு வாகன கட்டுப்பாடு திட்டமான ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு டெல்லியில் காற்று மாசுபடுவது கணிசமாக குறைந்திருப்பதாக டெல்லி அரசு ஏற்கெனவே கூறியிருந்தது.
கடந்த மாதம் செப்டம்பர் 13ந்தேதி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான 7 அம்ச திட்டங்களை அவர் அறிவித்தார்.
அப்போது பேசிய அவர், தலைநகர் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை குறைக்க மீண்டும் வரும் நவம்பர் மாதம் 4ந்தேதி முதல் 15ந்தேதி வரை ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தில் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை கெஜ்ரிவால் கடந்த 12ந்தேதி அறிவித்துள்ளார்.
இதன்படி, தனியாக வாகனம் ஓட்டும் பெண்களுக்கும் அல்லது மொத்தமாக பெண்கள் மட்டும் காரில் பயணிப்பவர்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள தாய்மார்கள் அல்லது பெண் உறவினர்களுக்கும் இந்த வாகன கட்டுப்பாட்டில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் மாசை குறைக்க ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் கொண்ட வாகனங்கள் பயன்படுத்தும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, இன்று இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்தலாம். எனினும், விதிகளை மீறி வாகனம் ஓட்டிய நபர்களுக்கு காவல் துறை அபராதம் விதித்தது.
இந்த திட்டத்தில் டெல்லி முதல் மந்திரிக்கு விதிவிலக்கு இல்லை. இதனால் அவர், இரட்டை இலக்க எண் கொண்ட வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.
இதேபோன்று டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story