டெல்லியில் மாசடைந்த காற்றால் சென்னைக்கு பாதிப்பா?


டெல்லியில் மாசடைந்த காற்றால் சென்னைக்கு பாதிப்பா?
x
தினத்தந்தி 4 Nov 2019 8:04 AM GMT (Updated: 4 Nov 2019 8:04 AM GMT)

டெல்லியில் மாசடைந்த காற்றால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படும் என தனியார் வானிலை ஆய்வு நிபுணர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுபொருட்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி கட்டுமான பணிகள், பட்டாசு வெடிப்பதன் காரணமாக காற்று மாசு அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை காற்று மாசு அபாய அளவை எட்டியது. இதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, பீகார் மாநிலங்களில் புகைமூட்டம் சூழ்ந்து இருப்பதை செயற்கைகோள் மூலம் நாசா நேற்று படம்பிடித்து, அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நாளை வரை மணிக்கு 20 முதல் 25 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஹா புயல் காரணமாக டெல்லி, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 7 மற்றும் 8-ந் தேதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் மாசடைந்த காற்றானது வட இந்தியாவில் இருந்து கிழக்கு கடலோரம் வழியே வந்து தமிழகத்தின் பெரும் பகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

டெல்லியில் காற்று தர குறியீடு 500க்கும் மேல் உள்ளது.  இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.  அடுத்த வாரம் இந்த காற்று தர குறியீடானது தமிழ்நாட்டில் 200 முதல் 300 வரை இருக்க கூடும் என வானிலை பற்றிய ஆய்வுகளை வெளியிடும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  எனினும், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்றானது சென்னை நகரில் வீசி வருகிறது.  இதனால் டெல்லியில் இருந்து சென்னைக்கு மாசடைந்த காற்று வரும் சாத்தியம் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.  டெல்லியிலுள்ள மாசடைந்த காற்று சென்னைக்கு எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்தி விடாது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story