தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன்கள் கொண்டு வர எடியூரப்பா தடை
தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன்கள் கொண்டு வர கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தடை விதித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் நிலவிய அரசியல் சூழல் தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இனிமேல் இதுபோன்ற சூழலை தவிர்க்கும் வகையில், தன்னை சந்திக்க வருபவர்கள் மொபைல் போன்கள் கொண்டு வர எடியூரப்பா தடை விதித்துள்ளார்.
தனது இல்லம் அமைந்துள்ள டாலர்ஸ் காலனியில், செல்போன்கள் கொண்டு வர தடை என அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டுள்ளது. மொபைல் போன்களுடன் யாரும் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது என்றும் எடியூரப்பா பாதுகாப்பு மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எடியூரப்பாவுக்கு சிக்கல் ஏற்படுத்திய ஆடியோ விவகாரத்தின் முழு விவரம்;-
கர்நாடகத்தில், 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் 11-ந்தேதி தொடங்கும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பா.ஜனதா சார்பில் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் கொடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதற்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதே வேளையில் 15 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, இடைத்தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்- மந்திரி எடியூரப்பா, உப்பள்ளியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ரகசியமாக பேசிய கருத்துகள் அடங்கிய ஆடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அந்த ஆடியோவில், கூட்டணி கட்சிகளின் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மேற்பார்வையில் மும்பையில் தங்க வைக்கப்பட்டனர். இதில் தனது பங்கு இல்லை. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் தியாகத்தால் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. அதனால் அவர்களுக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்“ என்று எடியூரப்பா பேசியுள்ளார்.
இந்த ஆடியோ ஆதாரத்தை, தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் போது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் அறிவித்து இருந்தார். இந்த விவகாரம் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story