“காவலில் உள்ள எனது தாயாருக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்கள்தான் பொறுப்பு” - மத்திய அரசுக்கு மெகபூபா மகள் எச்சரிக்கை


“காவலில் உள்ள எனது தாயாருக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்கள்தான் பொறுப்பு” - மத்திய அரசுக்கு மெகபூபா மகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2019 2:21 AM IST (Updated: 6 Nov 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

காவலில் உள்ள தனது தாயாருக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்கள்தான் பொறுப்பு மத்திய அரசுக்கு மெகபூபா மகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் தலைவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் வீட்டுக்காவலிலும், விருந்தினர் மாளிகை காவலிலும் வைத்தது.

இந்த நிலையில் மெகபூபாவின் மகள் இல்திஜா, விருந்தினர் மாளிகையில் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது தாயார் மெகபூபா பள்ளத்தாக்கின் கடுங்குளிரை சமாளிக்க ஏதுவாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையொட்டி டுவிட்டரிலும் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ எனது தாயாரின் உடல்நலம் குறித்து பல முறை கவலை தெரிவித்துள்ளேன். குளிர்காலத்தை சமாளிக்க ஏற்ற வகையில் சாதனங்கள் பொருத்தப்பட்ட இடத்துக்கு எனது தாயாரை இடமாற்றம் செய்யும்படி ஸ்ரீநகர் துணை கமிஷனருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கடிதம் எழுதி இருக்கிறேன். எனது தாயாருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என கூறி உள்ளார்.

ஸ்ரீநகர் துணை கமிஷனருக்கு தான் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Next Story