பிரதமர் மோடியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை அடுத்து தஞ்சாவூர் தொகுதியில் வாசன் போட்டியிட்டார்.
இந்நிலையில், சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 11ந்தேதி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
இந்த பயணத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனிடம், தன்னை சந்திப்பது பற்றி பிரதமர் மோடி பேசினார் என தகவல் வெளியானது. இதனை வாசனும் ஏற்று கொண்டார் என கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜி.கே.வாசன் இன்று சந்தித்துள்ளார். இது மரியாதை நிமித்த சந்திப்பு என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கவும் ஜி.கே. வாசன் திட்டமிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story