சிவசேனாவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது -சரத்பவார்


சிவசேனாவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது -சரத்பவார்
x
தினத்தந்தி 6 Nov 2019 1:26 PM IST (Updated: 6 Nov 2019 1:26 PM IST)
t-max-icont-min-icon

சிவசேனாவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது என அதன் தலைவர் சரத்பவார் தெரிவித்து உள்ளார்.

மும்பை

மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து  வருகிறது. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்து  உள்ளது.

வரும் 8-ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் காலம் முடிவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை  முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசினார்.

இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது  இல்லத்தில்  இன்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் சந்தித்து ஆலோசனை  நடத்தினார்.

இதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் சிவசேனாவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது. மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் தேசியவாத காங்.,  எதிர்கட்சியாகவே அமரும். மராட்டியத்தில் பாஜக - சிவசேனா இணைந்து தான் ஆட்சி அமைக்க வேண்டும் என கூறினார்.

Next Story