டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தானில் வழக்கறிஞர்கள், போலீசார் இடையே மோதல்


டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தானில் வழக்கறிஞர்கள், போலீசார் இடையே மோதல்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:22 AM GMT (Updated: 2019-11-06T15:52:10+05:30)

டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தானில் வழக்கறிஞர்கள், போலீசார் இடையே மோதல் வெடித்துள்ளது.

ஜெய்ப்பூர்,

தலைநகர் டெல்லியில் திஸ் ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் கடந்த 2-ந்தேதி கைதிகளை ஏற்றிவந்த சிறை வாகனம் மீது வக்கீல் ஒருவரின் கார் மோதியது.

காரில் வந்த வக்கீலை போலீசார் சிறை பிடித்து தாக்கியதைத் தொடர்ந்து, வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்துகிற அளவுக்கு நிலைமை மோசமானது. இரு தரப்பிலும் பலர் படுகாயம் அடைந்தனர். 14 மோட்டார் சைக்கிள்களும், போலீஸ் கார் ஒன்றும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 8 சிறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கோர்ட்டு வளாகம், குருஷேத்திர களம் போல மாறியது.

இந்த மோதல் தொடர்பாக ஒரு உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மற்றொருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மறுநாளில் இந்த மோதல்பற்றி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு, தானாக முன்வந்து அவசர விசாரணை நடத்தியது. ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.பி. கார்க் தலைமையிலான நீதி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சிறப்பு போலீஸ் கமிஷனர் சஞ்சய் சிங், கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஹரிந்தர் சிங் ஆகியோரை இடமாற்றம் செய்யவும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மேலும், வக்கீல்கள் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் ஐகோர்ட்டு கூறியது. இந்த உத்தரவுகள் போலீஸ் தரப்புக்கு அதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில், டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பாக நேற்று காலை 9.30 மணிக்கு திடீரென ஆயிரக்கணக்கான போலீசார் கைகளில் பதாகைகள், கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளுடன் அணி அணியாக திரளத்தொடங்கினர்.

அந்த பகுதியில் அமைந்த முக்கிய சாலையை அவர்கள் முடக்கினர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, மாலை 7.30 மணிக்கு போலீசாரின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் 10 மணி நேரம் நீடித்தது.

இந்தநிலையில், டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் அல்வர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நீதிபதி அறையில் இருந்த வழக்கறிஞர்கள் 2 பேரை அரியானா போலீசார் கைது செய்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

Next Story