வினாடி வினா போட்டியில் பரிசாக கிடைத்த பணத்தை பள்ளிக்கு வழங்கிய மாணவர்!!
கர்நாடகாவில் வினாடி வினா போட்டியில் பரிசாக கிடைத்த பணத்தை பள்ளிக்கு வழங்குவேன் என மாணவர் கூறியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகாவில் உள்ள கட்டாயா பகுதியைச் சேர்ந்தவர் கே.என்.தேஜஸ். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலையில் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நஞ்சப்பா ஒரு விவசாயத் தொழிலாளி. தாயார் கவுரமணி அரசு பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியாளராக உள்ளார். இவருக்கு ஒரு சகோதரி உள்ளார்.
இந்நிலையில், தேஜஸ் கன்னட டி.வி. நடத்திய வினாடி - வினா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் கேட்கப்பட்ட 15 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்ததன் மூலம் ரூ.6.4 லட்சத்தை பரிசாக பெற்றார்.
பரிசு பணத்தை எவ்வாறு செலவிடுவீர்கள்? என மாணவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தேஜஸ், பரிசு தொகையில் ஒரு பகுதியை தான் படிக்கும் பள்ளியில் காம்பவுண்டு சுவர் கட்டுவதற்கு வழங்குவேன். மேலும் எனது மூத்த சகோதரியின் திருமணத்திற்காகவும், எனது உயர் படிப்புகளுக்காகவும் பயன்படுத்துவேன் என்றார்.
கல்வி மந்திரி சுரேஷ்குமார் பேஸ்புக்கில் மாணவரை பாராட்டி பதிவிட்டார். பள்ளியில் காம்பவுண்டு சுவர் கட்டுவதற்கு உதவ முன்வந்த மாணவருக்கு நன்றி. பரிசு பணத்தை உனது படிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் கட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பரிசு தொகையை பள்ளி கட்டிடத்திற்கு கொடுப்பேன் என கூறிய மாணவர் தேஜசுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Related Tags :
Next Story