காற்று மாசை கட்டுப்படுத்த என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்- உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
காற்று மாசை கட்டுப்படுத்த என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என்று உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
புதுடெல்லி,
டெல்லியில் நிலவும் காற்று மாசு அங்குள்ள மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதே, காற்று மாசுவுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.
காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், காற்று மாசுக்கு காரணமான பயிர்க்கழிவு எரிப்புகளை தடுக்காத அரியானா, பஞ்சாப், டெல்லி மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
அதன்படி, இன்று தலைமைச்செயலாளர்கள் ஆஜர் ஆகினர். அப்போது, சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், டெல்லியில் சட்டவிரோத கட்டுமானங்கள், குப்பைகளை அகற்ற சரியான தொழில்நுட்பம் இல்லை, இவற்றை சரிசெய்ய என்ன செய்தீர்கள்? எதுவும் செய்யவில்லை என்றால் நீங்கள் எதற்காக தலைமைச் செயலாளராக இருக்க வேண்டும்?
விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 அளித்து பயிர் கழிவுகளை எரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுத்த 7 நாட்களுக்குள் பயிர் கழிவு எரிப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதி, எதிர்காலத்தில் பயிர் கழிவுகளை எரிப்பதை தடுக்க மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து விரிவான திட்டத்தை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story