முடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை முடிப்பதற்காக ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்


முடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை முடிப்பதற்காக ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 6 Nov 2019 3:39 PM GMT (Updated: 6 Nov 2019 9:15 PM GMT)

பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார மந்தநிலையால் ரியல் எஸ்டேட் துறை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான வீட்டுவசதி திட்டங்கள் பாதியில் முடங்கி உள்ளன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க முடிவு செய்து, அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது.

இந்த ரூ.25 ஆயிரம் கோடியில், ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசும், மீதமுள்ள ரூ.15 ஆயிரம் கோடியை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி. நிறுவனம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

நிதி பற்றாக்குறையால் வீடுகளை கட்டும் திட்டத்தை பாதியில் விட்டிருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கடன் வழங்குவதற்காக இந்த நிதி செலவிடப்படும். இதன் மூலம் 4.58 லட்சம் வீடுகளை கொண்ட, 1600 வீட்டுவசதி திட்டங்கள் மீண்டும் உயிர்பெறும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Next Story