அந்தமான் அருகே தீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல்; மீனவர்களுக்கு எச்சரிக்கை


அந்தமான் அருகே தீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2019 3:07 AM GMT (Updated: 7 Nov 2019 3:07 AM GMT)

அந்தமான் அருகே புல்புல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது.  இதனால் கடலோர பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

இந்நிலையில், அரபி கடலில் கியார் புயல் தோன்றியது.  தொடர்ந்து மஹா என்ற மற்றொரு புயல் அரபி கடலில் உருவானது.  இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.  இதனால் இன்று குஜராத் மற்றும் மராட்டியத்தில் மழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டு உள்ளது. ‘புல்புல்’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. 

இந்த புயல், அந்தமான் அருகே 400 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.  நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும்.  தொடர்ந்து மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.  இந்த புயல் காற்று மணிக்கு 155 கி.மீ. வரைக்கும் வேகமுடன் வீச கூடும்.  

இதனால் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதி சீற்றமுடன் காணப்படும்.  இதனை முன்னிட்டு வருகிற 11ந்தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Next Story