‘அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


‘அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 7 Nov 2019 11:23 PM GMT (Updated: 2019-11-08T04:53:36+05:30)

மதுரை அழகர் மலை மற்றும் அதனை சார்ந்த வனப்பகுதி தமிழக வனத்துறைக்கு சொந்தமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

புதுடெல்லி, 

மதுரை கள்ளழகர் திருக்கோவில், அழகர் கோவில் ஆலய நிர்வாகம் மற்றும் திருப்பதி பெரிய ஜீயர் மடத்தின் சுந்தர ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உள்ளிட்டோர் கடந்த 1987-ம் ஆண்டில் மதுரை கீழ்க்கோர்ட்டில் அழகர் மலை மற்றும் மலையை சேர்ந்த வனப்பகுதி கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என்று கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை கீழ்கோர்ட்டு கடந்த 1995-ம் ஆண்டு மனுவை தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பிற மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்து அழகர்மலை மற்றும் வனப்பகுதி கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பாலாஜி ஸ்ரீனிவாசன், மூத்த வக்கீல் மோகன் பராசரன் மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் மூத்த வக்கீல் வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் வாதாடினார்கள்.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வு இந்த வழக்கில் அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது.

அதில் ‘அழகர்மலை கோவில் நிர்வாகத்துக்கு சொந்தம் என்று ‘சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அழகர்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு மரங்களை வெட்டுதல், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட எந்த பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் அதே நேரத்தில் ஏற்கனவே தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகத்துக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பக்தர்கள் செல்வதற்கான சாலை விரிவாக்கத்துக்காக 25 அடி அகல நிலம் கோவில் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ள நீதிபதிகள் வனப்பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அந்த இடத்தை பராமரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

Next Story