பணமதிப்பு நீக்கம்:பொருளாதாரத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாக ராகுல்காந்தி சாடல்


பணமதிப்பு நீக்கம்:பொருளாதாரத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாக ராகுல்காந்தி சாடல்
x
தினத்தந்தி 8 Nov 2019 11:27 AM GMT (Updated: 8 Nov 2019 11:46 AM GMT)

இந்திய பொருளாதாரத்தை சிதைத்து பலருடைய உயிரை பலி வாங்கிய பணமதிப்பு நீக்கம் என்கிற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு தொலைக்காட்சியில் நேரடியாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்தார்.  

பணமதிப்பு நீக்கம் செய்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் டெல்லியில்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  இளைஞரணியினர்  ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில்  பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

இந்திய பொருளாதாரத்தை சிதைத்து பலருடைய உயிரை பலி வாங்கிய பணமதிப்பு நீக்கம் என்கிற  தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. 

பல உயிர்களை பறித்த இந்த தாக்குதல் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளை காணாமல் போக செய்தது. லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்தனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் நீதியின் முன் கொண்டு வரப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

Next Story