தேசிய செய்திகள்

3-வது ஆண்டு நினைவு தினம்: பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதித்தது என்ன? - சோனியா காந்தி காட்டம் + "||" + 3rd anniversary: What did the deflation measure achieve? - Sonia Gandhi Angry

3-வது ஆண்டு நினைவு தினம்: பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதித்தது என்ன? - சோனியா காந்தி காட்டம்

3-வது ஆண்டு நினைவு தினம்: பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதித்தது என்ன? - சோனியா காந்தி காட்டம்
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 3 ஆண்டுகளாகி உள்ளது. இந்த நடவடிக்கை சாதித்தது என்ன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,

2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி இந்திய வரலாற்றின் மறக்க முடியாத பக்கமாக பதிவாகி இருக்கிறது. அந்த நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.


ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்து, அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும்கூட வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் கால் கடுக்க மணிக்கணக்கில் காத்துக் கிடந்த நினைவுகள் மனதை விட்டு அகலவில்லை. அந்த நடவடிக்கையை மோடி மேற்கொண்டதின் 3-வது ஆண்டு நினைவுதினம் நேற்று ஆகும். இதையொட்டி காங்கிரஸ் கட்சி மோடி அரசை கடுமையாக சாடி உள்ளது.

சோனியா காந்தி

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கை:-

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான பிரசாரத்தால் தூண்டப்பட்ட அபத்தமான நடவடிக்கை. இது அப்பாவி மக்களுக்கும், நம்பிக்கைக்குரிய நாட்டு மக்களுக்கும் சொல்ல முடியாத பாதிப்பை ஏற்படுத்தியது. இது மோடி அரசின் ஆளுகை அணுகுமுறையின் சுருக்கம் ஆகும்.

ஒவ்வொரு இந்தியரும் எழுப்புகிற எளிமையான கேள்வி, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை சாதித்தது என்ன என்பதுதான். இந்த நடவடிக்கை, ஒரு கோடி பேரை வேலை இழக்க வைத்தது. இது இன்னும் தொடர்கிறது. வேலை இல்லா திண்டாட்டத்தை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொண்டு சென்றது. இந்தியாவின் சர்வதேச பொருளாதார தர மதிப்பீடு நிலையானது என்ற நிலையில் இருந்து எதிர்மறையானது என்ற அளவுக்கு போய் உள்ளது.

நாடு மறந்து விடும் என்று கருதி, பிரதமரும், அவருடன் இருப்பவர்களும் 2017-ம் ஆண்டு முதல் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டார்கள். துரதிர்‌‌ஷ்டவசமாக இந்த நாடோ, வரலாறோ அதை மன்னிக்காது, மறக்காது. இதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்யும். ஏனென்றால் நாங்கள் பாரதீய ஜனதாவை போல அல்ல. நாங்கள் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு உழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ராகுல் காந்தி

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ‘‘ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகளாகி உள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு என்னும் பயங்கரவாத தாக்குதல், இந்திய பொருளாதாரத்தை அழித்து விட்டது. பல உயிர்களை பறித்து விட்டது. லட்சக்கணக்கான சிறு வணிகங்களை அழித்துள்ளது. கோடிக்கணக்கானோரை வேலை இழக்கச்செய்து விட்டது’’ என தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை சாட தவறவில்லை.

இதையொட்டி அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்த 3 ஆண்டுகளில், இது எல்லா தீமைகளையும் அழித்து விட்டது என்று பாராட்டியவர்கள் அதன் தலையில் இருந்து தங்களை திருப்பிக் கொண்டு விட்டனர். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையானது பேரழிவு நடவடிக்கை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அது இந்திய பொருளாதாரத்தை அழித்து விட்டது. இதற்கு யாரேனும் பொறுப்பேற்க விரும்புகிறீர்களா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் இந்த நடவடிக்கையை கடுமையாக தாக்கி உள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ‘‘ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த சில நிமிடங்களிலேயே இது நாட்டின் பொருளாதாரத்தையும், கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையையும் அழித்து விடும் என்று கூறினேன். இப்போது புகழ் பெற்ற பொருளாதார வல்லுனர்களில் இருந்து சாதாரண மக்களும், எல்லா வல்லுனர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களும் இது வீணான நடவடிக்கை என்றே காட்டி உள்ளன’’ என கூறி உள்ளார்.