மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா - ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா?


மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா - ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா?
x
தினத்தந்தி 8 Nov 2019 11:15 PM GMT (Updated: 8 Nov 2019 10:26 PM GMT)

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ததால், மாநில அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சிகளும் முறையே 44 மற்றும் 54 இடங்களை பெற்றன. பிற கட்சிகள் 16 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தனர்.

ஆட்சி அமைக்க போதுமான இடங்களை பா.ஜனதா-சிவசேனா கூட்டணி பெற்றிருந்ததால், அவை இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. இதனை ஏற்க பாரதீய ஜனதா மறுத்து விட்டது.

எனவே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்தது. இது சிவசேனாவுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.

எனவே ஆட்சியமைக்க பாரதீய ஜனதாவுடன் சிவசேனா கைகோர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவானது. ஆனால் ஆட்சியமைப்பது தொடர்பாக இரு கட்சிகளும் ஒரு தடவை கூட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.

முதல்-மந்திரி பதவியை பங்கிட்டு தர ஒப்புக்கொண்டால் மட்டும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்த நிலையில் மராட்டிய அரசியலில் புதிய திருப்பமாக, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மாலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேரில் சென்று, தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் கொடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட கவர்னர், மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை கேட்டுக்கொண்டார். இதனால் கவர்னர் அடுத்த முடிவு எடுக்கும் வரை தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக செயல்படுவார்.

சட்டசபை தேர்தல் முடிந்து நேற்றுடன் 16 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், மாநிலத்தில் புதிய அரசு அமையும் சூழல் இன்னும் ஏற்படவில்லை. தற்போது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளதால், இனி மராட்டியத்தில் பாரதீய ஜனதா அல்லாத மாற்று அரசு அமையுமா? அல்லது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


Next Story