நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல; ரஞ்சன் கோகாய்


நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல; ரஞ்சன் கோகாய்
x
தினத்தந்தி 9 Nov 2019 5:50 AM GMT (Updated: 9 Nov 2019 5:50 AM GMT)

நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தனது தீர்ப்பில் ரஞ்சன் கோகாய் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.  அயோத்தி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தீர்ப்பு வழங்க இருப்பதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  இந்நிலையில், அயோத்தி வழக்கில் காலை 10.30 மணியளவில் இருந்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பினை வாசித்து வருகிறது.

இதில், அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம்.  தீர்ப்பை வாசிக்க அரைமணி நேரம் ஆகும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.

தொடர்ந்து, மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை.  அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது.  இந்த வழக்கில், பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை.

பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல.  தொல்லியல் துறை வழங்கியுள்ள ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை.

சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது.  அயோத்தி ராமர் பிறந்த இடம் என இந்து மக்கள் நம்புகின்றனர் என்பது மறுக்க இயலாதது.  இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது.  ஆனால், நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது.

அந்த இடத்தினை பாபர் மசூதி என முஸ்லிம்கள் அழைக்கின்றனர்.  பாபர் மசூதி இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.  நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  எதனையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்து விட முடியாது.  நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதனை தள்ளுபடி செய்துள்ளது.

Next Story