தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு தீர்ப்பும்; அரசியல் தலைவர்களின் வரவேற்பும் + "||" + Ayodhya case verdict; Political leaders welcome it

அயோத்தி வழக்கு தீர்ப்பும்; அரசியல் தலைவர்களின் வரவேற்பும்

அயோத்தி வழக்கு தீர்ப்பும்; அரசியல் தலைவர்களின் வரவேற்பும்
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பினை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சார்பில் இறுதி தீர்ப்பு வாசிக்கப்பட்டது.  இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பினை வழங்குகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.

இந்த தீர்ப்பு விவரத்தில், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து அலகாபாத் நீதிமன்றம் வழங்கியது தவறு.  கடந்த 1857ம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லிம் அமைப்புகள் தவறி விட்டன.  அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும்.  முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்கவும் நீதிபதிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பினை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்கும் வகையில் பேசியுள்ளனர்.  இதுபற்றி மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறும்பொழுது, அனைவரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று அமைதியை நிலைநாட்ட வேண்டும் என கூறினார்.

பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார், அயோத்தியா தீர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் வரவேற்க வேண்டும்.  இது சமூக நல்லிணக்கத்திற்கு பலனளிக்கும். இந்த பிரச்சினையில் இனிமேலும் சர்ச்சை இருக்கக்கூடாது.  அதுதான் மக்களிடம் எனது வேண்டுகோள் என கூறினார்.

நிர்மோகி அகாரா அமைப்பின் செய்தி தொடர்பாளர் கார்த்திக் சோப்ரா கூறும்பொழுது, கடந்த 150 ஆண்டுகால எங்கள் போராட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்து உள்ளது.  ராமர் கோவிலை கட்டுவதற்கும், அதனை நிர்வகிப்பதற்கும் மத்திய அரசு அமைக்கவுள்ள அறக்கட்டளையில் நிர்மோகி அகாராவுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளித்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

அயோத்தி வழக்கில் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி கூறும்பொழுது, சுப்ரீம் கோர்ட்டு இறுதியாக ஒரு தீர்ப்பை வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன் என கூறினார்.

அயோத்தி தீர்ப்பு பற்றி பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்பொழுது, இது ஒரு முக்கிய தீர்ப்பு.  பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கை படமாக்கும் கங்கனா
நடிகை கங்கனா ரணாவத் அயோத்தி வழக்கை படம் எடுக்க உள்ளார்.