கே.பி.எல். போட்டியில் சூதாட்டம்; சர்வதேச சூதாட்ட தரகர் கைது


கே.பி.எல். போட்டியில் சூதாட்டம்; சர்வதேச சூதாட்ட தரகர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2019 3:14 AM GMT (Updated: 10 Nov 2019 3:14 AM GMT)

கே.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சர்வதேச சூதாட்ட தரகர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் போன்று கர்நாடகாவில் கே.பி.எல். எனப்படும் கர்நாடக பிரிமீயர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த போட்டிகளில் சூதாட்ட புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சூதாட்டம் தொடர்பாக பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அலி அஷ்பாக் தாராவை போலீசார் கைது செய்தனர். மேலும் 30க்கும் அதிகமான வீரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக சூதாட்ட தரகரான பாவேஷ் பக்னா என்பவரை கடந்த அக்டோபர் 2ந்தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சயாம் என்ற சூதாட்ட தரகரை போலீசார் தேடிவந்தனர். இவர்கள் பல்லாரி ‘டஸ்கர்ஸ்‘ அணியின் பந்து வீச்சாளர்களை தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும்படி வலியுறுத்தி உள்ளனர் என தெரிய வந்தது.  அதன் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்றதோடு, ஹவாலா முறையில் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. சூதாட்டமானது சர்வதேச அளவில் நடந்துள்ளதும், துபாயில் உள்ள தரகர்களுக்கு ஹவாலா முறையில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகின.  இதில் பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச சூதாட்ட தரகரான சயாம் மீது போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து, தொடர்ந்து அவரை தேடி வந்தனர்.  இதனிடையே, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வைத்து கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சயாம் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Next Story