தெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை: கல்வீச்சில் 7 போலீசார் காயம்
தெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது இதில் 7 போலீசார் காயம் அடைந்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 5-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
இதையடுத்து ஒரே நாளில் 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை அதிரடியாக நீக்கம் செய்து முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நடவடிக்கை எடுத்தார். பணி நீக்கம் செய்யப்பட்டதால் சில ஊழியர்கள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் உயிரிழந்தனர்.
அரசை கண்டித்து தினமும் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தெலுங்கானாவில் பஸ் ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று போலீஸ் தடையை மீறி பேரணி நடத்த ஊர்வலமாக சென்றனர். அப்போது அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியானதையட்டி பேரணி நடத்த அனுமதி கிடையாது என்று போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் போலீசாருக்கும் பஸ் ஊழியர்களுக்கும் வாக்கு வாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது திடீரென கற்கள் வீசப்பட்டன.
நிலைமை கையை மீறி சென்றதால் போலீசார் தடியடி நடத்தி போராட்டக்கூட்டத்தை களைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப்பிறகு போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கல்வீச்சில் 7 போலீசார் காயமடைந்தனர். காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெலுங்கானா அரசு, இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு பஸ் ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அங்கு ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story