சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ‘அயோத்திக்கு இனிமேல் பொற்காலமாக இருக்கும்’ - உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ‘அயோத்திக்கு இனிமேல் பொற்காலமாக இருக்கும்’ - உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 9:01 PM GMT)

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ள உள்ளூர் மக்கள், அயோத்திக்கு இனிமேல் பொற்காலமாக இருக்கும் என கூறியுள்ளனர்.

அயோத்தி,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கோவில்களின் நகரமாக விளங்கி வரும் அயோத்திக்கு நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் சென்று அங்குள்ள கோவில்களில் வழிபாடு செய்தனர். குறிப்பாக அனுமன்கார்கி, நயா கட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையிலேயே அதிக மக்கள் கூட்டம் காணப்பட்டது. அங்குள்ள ராமர் கோவில் மற்றும் அனுமன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இதைப்போல அங்கு ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக தூண்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் ராமஜென்மபூமி நியாஸ் பணிமனையையும் ஏராளமான மக்கள் பார்வையிட்டு சென்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு முழு விவரத்தை அறிந்து கொள்வதற்கான ஆர்வமும் அவர்களிடையே காணப்பட்டது. இதனால் செய்தித்தாள்களை விற்பனை செய்வோரிடம் அதிக கூட்டம் காணப்பட்டது.

அங்குள்ள ஓட்டல் ஒன்றின் மேலாளராக பணிபுரியும் சந்தீப் சிங் என்பவர் தீர்ப்பு குறித்து கூறுகையில், ‘அயோத்திவாசிகளுக்கு இது ஒரு அரிதான ஞாயிறு. ஏனெனில் சூரிய கடவுளும், வாயு கடவுளின் மகனும் (அனுமன்) மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அயோத்தி பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட்டுவிட்டது என்ற திருப்தியுடன், ஒரு புதிய ஞாயிற்றுக்கிழமையில் நாங்கள் கண் விழித்திருக்கிறோம்’ என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

இதைப்போல அனூப் சைனி என்பவர் கூறும்போது, ‘அயோத்தி இனி சரியான திசையில் வளர்ச்சியடையும். வருகிற நாட்கள் அயோத்திக்கு பொற்காலமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதையொட்டி அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த கெடுபிடிகள் அனைத்தும் விரைவில் நீங்கி, அயோத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் என அனுமன்கார்கி கோவில் பூசாரி மகந்த் ராஜு தாஸ் தெரிவித்தார். முன்னதாக உள்ளூர் முஸ்லிம் தலைவர் பப்லூ கானுடன் இணைந்து அவர் ராமஜென்மபூமி நியாஸ் பணிமனையை பார்வையிட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து பப்லூ கான் கூறுகையில், ‘குரானை நான் மிகுந்த பக்தியுடன் பின்பற்றி வருகிறேன். முஸ்லிம்களுக்கு மக்கா எவ்வளவு புனிதமானதோ, அதே அளவுக்கு இந்துக்களுக்கு ராமஜென்மபூமி புனிதமானது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே மிலாது நபியையொட்டி அயோத்தியில் வழக்கமாக நடைபெறும் முஸ்லிம்களின் பேரணிகள் நேற்று ரத்து செய்யப்பட்டு இருந்தன.


Next Story