மராட்டிய மாநிலம்: பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது... ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்குமா? இன்று தெரியும்


மராட்டிய மாநிலம்:  பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது... ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்குமா? இன்று தெரியும்
x
தினத்தந்தி 11 Nov 2019 5:06 AM GMT (Updated: 11 Nov 2019 5:06 AM GMT)

மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு கொடுப்பது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு அவசரமாக கூடுகிறது.

புதுடெல்லி,

மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தன. தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றன. ஆனால், முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற சிவசேனாவின் தொடர் பிடிவாதம் காரணமாக பாஜகவால்  ஆட்சியமைக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் நேற்று மாலை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினர். 15 நிமிடங்கள் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சந்திரகாந்த் பாட்டீல், மராட்டியத்தில்  ஆட்சியமைக்க போவதில்லை என தெரிவித்தார். தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிவசேனா, துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பாஜகவும், சிவசேனாவும் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்த மக்களை சிவசேனா அவமதிக்க விரும்பினால், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்றும், அதற்கு, தங்களின் வாழ்த்துகள் எப்போதும் உண்டு என்றும் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து  மராட்டிய கவர்னர்  மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிவசேனாவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தமது கட்சிக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவையும், ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தையும் இன்றிரவு 7.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, பாஜகவுடனான கூட்டணி இல்லை என அறிவித்தால் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு எடுப்போம் என தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய அமைச்சரவையில் இருந்து அரவிந்த் சாவந்த் பதவி விலக வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இன்று காலை அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளனர். மராட்டியத்தில்  கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா அழைப்பு விடுத்தால் அதை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்தும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் நிபந்தனைகளை சிவசேனா ஏற்றால் மட்டுமே கூட்டணி வைப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.

இதற்கிடையே, மும்பையில் மோடாஸ்ரீ  என்ற  இடத்தில் உள்ள உத்தவ் தாக்கரே வீட்டுக்கு சென்று அவரது மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் சிவசேனா மூத்த தலைவர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, ஆளுநரின் அழைப்பு, தேசியவாத காங்கிரஸின் நிபந்தனைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

மராட்டிய மாநிலத்தில்  வேகமாக மாறிவரும் அரசியல் முன்னேற்றங்களை அடுத்து காங்கிரஸ் செயற்குழு இன்று காலை கூடுகிறது. மராட்டிய மாநில நிலவரம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் அவசரமாக காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது. 

சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தேசியவாத காங்கிரசின் நிபந்தனை ஏற்கப்பட்டதால் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க வியூகம்  வகுக்கப்பட்டது.  மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தருவது பற்றி காங்கிரஸ் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story