டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு


டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Nov 2019 12:56 PM IST (Updated: 12 Nov 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

ஜவகர்லால் நேரு பல் கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தால் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்றதாகும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் பல்கலைக்கழக வளாகத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ளன.

இங்கு மாணவர்களுக்கான விடுதி கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதைப்போல மாணவர்கள் உபயோகிக்கும் தண்ணீர் மற்றும் மின்சாரத்துக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் உடை விஷயத்திலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். கட்டண உயர்வை திரும்பப்பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறி கடந்த 14 நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வசந்த்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஏ.ஐ.சி.டி.இ. கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டார். இதனையறிந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கலையரங்கம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து டெல்லி போலீசாரும், துணை ராணுவத்தினரும் தடுப்பு வேலி அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் மாணவர்கள் அந்த தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்து முன்னேற முயன்றனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் கலவரம் மூளும் சூழலும் உருவானது.

எனவே மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். மேலும் சில மாணவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினார் கள். போலீசாரின் இந்த நடவடிக்கையால் போராட்டம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும்போது, “நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு போதுமான இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அரசியல் வலுவூட்டப்படுகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 51 சதவீதம் பேர் மாணவிகளே. இந்தியா உலகளாவிய கற்றல் மையமாக வெளிப்படும் நேரம் மீண்டும் வந்துவிட்டது” என்று கூறினார்.


Next Story