அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் குறித்து முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் 17-ந் தேதி முடிவு


அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் குறித்து முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் 17-ந் தேதி முடிவு
x
தினத்தந்தி 12 Nov 2019 4:30 AM IST (Updated: 12 Nov 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக 17-ந் தேதி நடைபெறும் முஸ்லிம் தனிச்சட்ட வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சன்னி வக்பு வாரிய வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி தெரிவித்தார்.

புதுடெல்லி,

அயோத்தியில் நூற்றாண்டுகளாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வந்த ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய நீதிபதிகள், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க அரசுக்கும் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் என அனைத்து பிரிவினரும் ஏற்றுக்கொண்டு உள்ளனர். மேலும் இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒன்றான சன்னி வக்பு வாரியமும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து உள்ளது.

அதேநேரம் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டு இருந்தனர். இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அயோத்தி வழக்கில் உத்தரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் பிரிவுகளின் சார்பில் ஆஜரான வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்த வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக முஸ்லிம் பிரிவினரிடம் திட்டம் ஏதாவது உள்ளதா? என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்த வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து 17-ந் தேதி நடைபெறும் அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

மூத்த வக்கீலான ஜாபர்யாப் ஜிலானி அயோத்தி வழக்கின் விசாரணைக்காக கீழ் கோர்ட்டு, ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு அனைத்திலும் முஸ்லிம் பிரிவினருக்காக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story