தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு + "||" + The Governor rejected Shiv Sena's request for a three-day stay in Maharastra - Excited by subsequent turns

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு
ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை கவர்னர் நிராகரித்துவிட்டார். அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2½ ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.


இதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா? என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி பின்வாங்கிவிட்டது.

இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம் அழைத்த கவர்னர், ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி நேற்று இரவு 7.30 மணிக் குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.

அப்போது, ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கவேண்டுமானால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று சிவசேனாவுக்கு சரத் பவார் நிபந்தனை விதித்தார். அதை ஏற்று மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசில் இருந்து சிவசேனா நேற்று விலகியது. அந்த கட்சியின் ஒரே மந்திரியான அரவிந்த் சாவந்ந் நேற்று ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி. ஆகியோர் தெற்கு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சரத்பவாரை சந்தித்து பேசினார்கள்.

அதன்பிறகு உத்தவ் தாக்கரே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை போனில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். இரு தலைவர்களும் 7 நிமிடங்கள் உரையாடினார்கள்.

இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மராட்டியத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், சுஷில்குமார் ஷிண்டே, மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து டெல்லி திரும்பியதை தொடர்ந்து, சோனியா காந்தியின் இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், காரிய கமிட்டி கூட்டத்தில் மராட்டிய மாநில சூழ்நிலைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அந்த மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசித்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. அத்துடன் சரத்பவாருடனும் சோனியா காந்தி பேசியதாகவும், தேசியவாத காங்கிரசுடன் மேலும் ஆலோசிக்க வேண்டி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாலையில் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள்.

அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய ஆதித்த தாக்கரே, ஆட்சி அமைக்க சிவ சேனாவை அழைக்குமாறு கவர்னரிடம் உரிமை கோரியதாகவும், இதற்கு காலஅவ காசம் கேட்டதாகவும், ஆனால் அவர் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைய கொள்கை அளவில் ஆதரவு அளிப்பதாக இரு கட்சிகள் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

பின்னர் கவர்னர் மாளிகையின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், சிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும், என்றாலும் அவர்களால் அதற்கான ஆதரவு கடிதங்களை அளிக்க முடியவில்லை என்றும், ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டதாகவும், ஆனால் அவகாசம் அளிக்க இயலாது என்று கவர்னர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.

சிவசேனா குழுவினர் சந்தித்து விட்டு சென்ற பிறகு, சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு கவர்னரை சந்தித்து பேசினார்கள். அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், இப்படி அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களால் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் குறைந்த கொரோனா பதிப்பு: இன்று மேலும் 11,921 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 11,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 18,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
மராட்டியத்தில் இன்று மேலும் 18,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் இன்று மேலும் 169 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 169 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் மேலும் 20,419- பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் புதிதாக 20,419- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...