காங்கிரஸ் முடிவுக்காக காத்திருக்கிறோம்: தேசியவாத காங்கிரஸ்


காங்கிரஸ் முடிவுக்காக காத்திருக்கிறோம்: தேசியவாத காங்கிரஸ்
x
தினத்தந்தி 12 Nov 2019 5:34 AM GMT (Updated: 12 Nov 2019 5:34 AM GMT)

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் பாஜக- சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் போதிய அளவு எண்ணிக்கை இருந்த போதிலும், இரு கட்சிகளுக்கும் இடையேயான அதிகார பகிர்வில் உடன்பாடு எட்டப்படாததால், கூட்டணி முறிந்தது. இதையடுத்து, 105 இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால், பாஜக ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று பின்வாங்கி விட்டது. 

இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம் அழைத்த கவர்னர், ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி நேற்று இரவு 7.30 மணிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாலையில் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள்.

அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய ஆதித்த தாக்கரே, ஆட்சி அமைக்க சிவசேனாவை அழைக்குமாறு கவர்னரிடம் உரிமை கோரியதாகவும், இதற்கு கால அவகாசம் கேட்டதாகவும், ஆனால் அவர் அவகாசம் அளிக்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைய கொள்கை அளவில் ஆதரவு அளிப்பதாக இரு கட்சிகள் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

சிவசேனா குழுவினர் சந்தித்து விட்டு சென்ற பிறகு, சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு கவர்னரை சந்தித்து பேசினார்கள். அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார். 

இதனால், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவை கேட்டுப்பெறுவதில் தேசியவாத காங்கிரஸ் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கிடையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் இதுபற்றி கூறுகையில், “ எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அது கூட்டு முடிவாகவே எடுப்போம்.  நேற்று காங்கிரஸ் பதிலுக்காக காத்திருந்தோம். ஆனால், பதில் வரவில்லை. எங்களால் தனியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. எங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் தேர்தலில் ஒன்றாகவே போட்டியிட்டோம், ஒப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்றார். 

Next Story