அயோத்தி தீர்ப்பு குறித்து அதிருப்தி; ஓவைசி மீது வழக்குப்பதிவு


அயோத்தி தீர்ப்பு குறித்து அதிருப்தி; ஓவைசி மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 Nov 2019 6:12 AM GMT (Updated: 12 Nov 2019 6:12 AM GMT)

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து விமர்சித்த ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போபால்,

கடந்த 9 ஆம் தேதி, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம். மசூதி கட்டிக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே  5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் நிலம் தர மத்திய அரசுக்கும் உத்தரப்பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த, அசாதுதின் ஓவைசி, அயோத்தி  வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தாம் உடன்படவில்லை என்று அவர் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், எங்களுக்கு நமது அரசியலமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்கள் சட்ட உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்தோம். இன்னும் தொடர்ந்து போராடுவோம். ஐந்து ஏக்கர் நிலம் நன்கொடை எங்களுக்கு தேவையில்லை. உச்சநீதிமன்றம் வழங்க கூறிய ஐந்து ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும். அந்த 5 ஏக்கர் நிலத்தை வாங்கும் மனநிலையில் நாங்கள் இல்லை என்று ஓவைசி கூறியிருந்தார். 

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கறிஞர் பவன்குமார் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் ஓவைசி பேசுவதாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் அசாதுதின் ஓவைசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

Next Story