கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Nov 2019 5:52 AM GMT (Updated: 13 Nov 2019 8:58 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

புதுடெல்லி,

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.

14 மாதங்களுக்கு பிறகு கூட்டணி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் கூட்டணி கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 23-ந் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

அந்த நம்பிக்கை வாக் கெடுப்பின் போது காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 1. முனிரத்னா (ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி), 2. பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), 3. ரோஷன் பெய்க் (சிவாஜிநகர்), 4. எஸ்.டி.சோமசேகர் (யஷ்வந்தபுரம்), 5. கோபாலய்யா (மகாலட்சுமி லேஅவுட்), 6. பிரதாப்கவுடா பட்டீல் (மஸ்கி), 7. ஸ்ரீமந்த்பட்டீல் (காக்வாட்), 8. ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), 9. மகேஷ் குமடள்ளி (அதானி), 10. பி.சி.பட்டீல் (இரேகூர்), 11. நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), 12. எச்.விஸ்வநாத் (உன்சூர்), 13. சிவராம் ஹெப்பார் (எல்லாப்பூர்), 14. சங்கர் (ராணிபென்னூர்), 15. ஆனந்த்சிங் (விஜயநகர்), 16. எம்.டி.பி.நாகராஜ் (ஒசக்கோட்டை), 17. சுதாகர் (சிக்பள்ளாப்பூர்) ஆகிய 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர்கள் அனைவரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.

இதில் மகாலட்சுமி லேஅவுட், உன்சூர், கே.ஆர்.பேட்டை ஆகிய 3 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 14 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சபாநாயகரின் இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 17 பேரும் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவின் மீது நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், ஜனதா தளம் (எஸ்) தரப்பில் வக்கீல் ராஜீவ்தவன் ஆகியோர் வாதாடினார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 25-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையே, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குறித்து எடியூரப்பா பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆடியோவை சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள அம்சங்களை கவனத்தில் கொள்வதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தீர்ப்பு தாமதமானால், தாங்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பதால் இடைத்தேர்தலை தள்ளிவைக்குமாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் அமர்வில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 25.7.2019 மற்றும் 28.7.2019 ஆகிய தேதிகளில் மனுதாரர்களாகிய எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து கர்நாடகா சட்டசபையின் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும்.

அதே நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பித்த தேதியில் இருந்து கர்நாடகா 15-வது சட்டசபையின் பதவி காலம் முடிவடையும் வரை இந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற சபாநாயகரின் உத்தரவில் உள்ள பகுதி ரத்து செய்யப்படுகிறது. அதாவது தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் கர்நாடகாவில் இடைத்தேர்தலில் போட்டியிடலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்த எம்.எல்.ஏ.க்கள் நேராக சுப்ரீம் கோர்ட்டுக்கு வராமல் ஐகோர்ட்டை முதலில் அணுகியிருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


Next Story