விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி: சொகுசு விடுதி, படகு போக்குவரத்துக்கும் ஏற்பாடு


விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி: சொகுசு விடுதி, படகு போக்குவரத்துக்கும் ஏற்பாடு
x
தினத்தந்தி 13 Nov 2019 10:30 PM GMT (Updated: 13 Nov 2019 10:26 PM GMT)

விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டல், சொகுசு தங்கும் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்கள், அயோத்தியில் தொடங்கப்பட உள்ளன.

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அயோத்தியை முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அயோத்தி கோட்ட தகவல் பிரிவு துணை இயக்குனர் முரளிதர் சிங் கூறியதாவது:-

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், நாட்டின் மிகப்பெரிய வழிபாட்டு தலமாக அமையும். 2 ஆயிரம் தொழிலாளர்கள், நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், 2½ ஆண்டு காலத்தில் கோவிலை கட்டி முடித்து விடலாம். 65 சதவீத கற்கள் ஏற்கனவே செதுக்கப்பட்டுள்ளன.

அயோத்தி, ஆன்மிக நகராக உருவாக்கப்படும். ஆங்காங்கே 10 ஸ்ரீராம் நுழைவாயில்கள் கட்டப்படும். பக்தர்கள் வசதிக்காக 10ஆயிரம் தங்கும் இடங்கள் உருவாக்கப்படும். கோவிலை சுற்றி உள்ள 77 ஏக்கர் வளாகத்தில் எண்ணற்ற மத அடையாளங்கள் நிறுவப்படும். பசு காப்பகம், தர்ம சத்திரங்கள், வேத நிலையங்கள் மற்றும் மத கட்டிடங்கள் அமைக்கப்படும்.

கோவிலை சுற்றி உள்ள 5 ஏக்கர் நிலப்பகுதியை பராமரிக்க வேண்டியது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அமைக்கப்படும் அறக்கட்டளையின் பொறுப்பாகும்.

அயோத்தியில் மின்னல் வேகத்தில் சர்வதேச விமான நிலையம் கட்டப்படும். அதன்மூலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராமநவமி கொண்டாட்டத்தின்போது, முதலாவது விமானம் புறப்பட வழி பிறக்கும்.

அயோத்தி ரெயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அயோத்தியில் சர்வதேச பஸ் முனையம் உருவாக்கப்படும். பைசாபாத்-அயோத்தி இடையே 5 கி.மீ. நீளத்துக்கு பிரமாண்ட பாலம் கட்டப்படும்.

அயோத்தியில் ஐந்து நட்சத்திர ஓட்டலும், 10 சொகுசு தங்கும் விடுதிகளும் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கப்படும். ராமர் கோவில் சம்பந்தப்பட்ட குளங்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்.

அயோத்தியில் உள்ள சரயு ஆற்றில் உல்லாச படகு போக்குவரத்து தொடங்கப்படும். மொத்தத்தில் திருப்பதி நகரம் போன்று அயோத்தி மாற்றப்படும். அதற்கு 4 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story