உண்மை வெற்றி பெற்றுள்ளது: ரபேல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜக கருத்து


உண்மை வெற்றி பெற்றுள்ளது: ரபேல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜக கருத்து
x
தினத்தந்தி 14 Nov 2019 7:42 AM GMT (Updated: 14 Nov 2019 7:42 AM GMT)

ரபேல் வழக்கில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

பிரான்சு நாட்டிடம் இருந்து 36 விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை  மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10-ந் தேதி ஒத்திவைத்தனர். 6 மாதங்களுக்கு பின்னர் ரபேல் மறுசீராய்வு மனுக்கள் மீது இன்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள பாஜக, உண்மை வென்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், உண்மைக்கு இடையூறுகள் இருக்கும் எனவும் ஆனால் தோற்கடிக்கப்படாது எனவும் கூறியுள்ள பாஜக, மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி  இது எனவும் தெரிவித்துள்ளது.

Next Story