தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன்! - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்


தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன்! - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்
x
தினத்தந்தி 14 Nov 2019 10:44 AM GMT (Updated: 14 Nov 2019 10:44 AM GMT)

தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன்! என ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் கூறி உள்ளார்.

கொல்லம், 

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விடுதி அறையில் பாத்திமா லத்தீப்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட நிலையில்,  பிரேத பரிசோதனை   முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவியின் உடைமைகளும் ஒப்படைக்கப்பட்டன.

இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என அவரது செல்போனில் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தார்.

மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த பதிவில் கூறியிருந்தார். அந்த செல்போன் பதிவுகள் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் 8ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.

மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர்,  ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறது.  சிபிஐ-ல் பணியாற்றியவர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் குறித்து அவரது தாயார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகள், முக்காடு (சால்) அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்து விட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம்.

நாங்கள் என்ன செய்ய.... பெயர் பாத்திமா லத்தீப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன்.  அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடியில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடியில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண் குறித்து பேராசிரியரிடம் எனது மகள் விவாதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. 

படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விஷயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம் மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.

பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்து போயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடியில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெக்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவளை தூக்குக் கயிறு நெரிப்பதை எப்படி எதிர் கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?

மகளை இழந்து தவிக்கும் தாம், உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று தனது மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம் என்று  கூறியுள்ளார்.

Next Story