பதவிக்காக அரசியல் செயல்பாட்டு பாணியையும் மாற்ற ஆர்வமாக உள்ள சிவசேனா
முதல்வர் பதவிக்காக சிவசேனா தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மட்டுமல்லாமல், அதன் செயல்பாட்டு பாணியையும் மாற்ற ஆர்வமாக உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளின் அதிகார பங்கு மோதலால் ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் களம் இறங்கிய சிவசேனாவின் கனவும் தகர்ந்தது.
ஆட்சி அமைப்பதற்கு 3 நாள் அவகாசம் கேட்ட அக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த கவர்னர் பகத்சிங் கோஷியாரி 3-வது பெரிய கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். உரிய நேரத்தில் யாரும் ஆட்சியமைக்க முன்வராததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து தங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி என கூறி வரும் சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை.
சிவசேனாவை ஆதரிக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி சமரசமாகி முன் வந்தாலும் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
* முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மூன்று கட்சிகளும் பெற வேண்டும்.
* ஆட்சி அதிகாரங்களில் மூன்று கட்சிகளுக்கும் சம அளவில் பங்கு வேண்டும்.
* புதிய அரசு குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தின்படி நடைபெற வேண்டும்.
* பொதுச்செயல் திட்டத்தை மூன்று கட்சிகளின் குழுக்கள் முடிவு செய்ய வேண்டும்.
* சிவசேனா கட்சி தனது இந்துத்துவா கொள்கையை கைவிட வேண்டும்.
* ஆதித்யா தாக்கரேக்கு முதல்-மந்திரி பதவி அளிக்கக் கூடாது.
* மராட்டிய அமைச்சரவையில் காங்கிரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இலாக்காக்களை தர வேண்டும்.
* உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரசுக்கு முக்கிய பங்கு தர வேண்டும்.
* நீண்ட கால செயல்திட்டங்களை அமல்படுத்த ஆலோசனை பெற வேண்டும்.
* அனைத்து முடிவுகளும் ஒருங்கிணைந்த நிலையில் எடுக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் இந்த நிபந்தனைகளை கண்டு சிவசேனா தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் அவர்கள் தங்களது முயற்சியை கைவிடாமல் காங்கிரசை அரவணைத்து செல்ல முடிவு செய்தனர்.
எல்.கே.அத்வானி, சரத் பவார், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, பிரமோத் மகாஜன், விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய ஒவ்வொரு ரக அரசியல்வாதிகளும் பாலசாகேப் தாக்கரேவை சந்திக்க அல்லது அவருடன் அரசியல் விஷயம் பேச, மடோஸ்ரீக்கு சென்ற நாட்கள் முடிவுக்கு வந்து விட்டது. 2012 ஜனாதிபதி தேர்தலின்போது சிவசேனாவின் ஆதரவைப் பெற சரத்பவாருடன் பிரணாப் முகர்ஜியும், மடோஸ்ரீக்கு விஜயம் செய்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால் கடந்த வாரத்தில், சிவசேனா பாஜகவுடனான உறவுகளை முறித்துக் கொண்ட பிறகு முதல்வர் பதவிக்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்த பிறகு சிவசேனா தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மட்டுமல்லாமல், அதன் செயல்பாட்டு பாணியையும் மாற்ற ஆர்வமாக உள்ளது.
தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் ஆட்சியை உருவாக்கும் முறைகள் குறித்து விவாதிக்க கடந்த திங்களன்று, உத்தவ் தாக்கரே பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்டில் சரத்பவாரை சந்தித்தார்.
அகமது படேல் அல்லது அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சிவசேனா தூதர்கள் டெல்லிக்கு பறக்கத் தொடங்கியுள்ளனர். "தாதர் (சிவசேனா பவன் அமைந்துள்ள இடம்) முதல் டெல்லி வரை, தாக்கரேக்கள் வெகுதூரம் வந்துவிட்டனர்" என்று ஒரு சிவசேனா வரலாற்றாசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
சிவசேனாவுடனான கூட்டணி ஆட்சியில் இடம்பெறும்போது, முன்வைக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், மும்பை டிரைடண்ட் ஓட்டலில் கூடி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தரப்பில், துணை முதலமைச்சர் பதவியை 5 ஆண்டுகளுக்கு தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கைகளை, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஏற்றுக் கொண்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான் கூறும் போது,
மராட்டியத்தில் அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் “பூர்வாங்க” கட்டத்தில் உள்ளன. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆலோசனைகள் நடத்தின. அவர்கள் பொதுவான குறைந்தபட்ச திட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் உருவாக்க வேண்டும்.
“காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா இதுவரை பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. காங்கிரசுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையில் இன்று மீண்டும் கூட்டம் நடைபெறும், பின்னர் இரு கட்சிகளும் சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
பொதுவான குறைந்தபட்ச திட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டவுடன் காங்கிரஸ் உயர்மட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story