ரபேல் போர் விமான வழக்கில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


ரபேல் போர் விமான வழக்கில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Nov 2019 10:30 PM GMT (Updated: 14 Nov 2019 6:51 PM GMT)

ரபேல் போர் விமான வழக்கு தொடர்பான மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

புதுடெல்லி,

ரபேல் போர் விமான வழக்கு தொடர்பான மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

ஊழல் குற்றச்சாட்டு

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ‘ரபேல்’ ரக போர் விமானங்களை ரூ.56 ஆயிரம் கோடிக்கு வாங்க கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

அனில் அம்பானி, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறியதுடன், ரபேல் விமான பேரத்தில் ஊழல் நடந்துள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து வழக்கு பதிவு செய்து கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், வக்கீல்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா ஆகிய 6 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

மறுஆய்வு மனுக்கள்

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி வழங்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி, மேற்கண்ட 6 பேரில் வக்கீல் எம்.எல்.சர்மா தவிர மற்ற 5 பேரும் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மறுஆய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அதே அமர்வே விசாரித்தது. கடந்த மே 10-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

இந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில் சில தனி மனிதர்களின் கருத்துகள் ஒரு வழக்கை தோண்டித் துருவி நடத்துவதற்கான முகாந்திரம் கொண்டதாக இருக்க முடியாது. ரபேல் விமானங்களை வாங்கியது தொடர்பாக அரசு மேற்கொண்ட நடைமுறைகளில் எந்தவித சந்தேகமும் கொள்வதற்கு இடமில்லை என்ற வகையில் இந்த கோர்ட்டு திருப்தி அடைந்து உள்ளது.

முகாந்திரம் இல்லை

நடைமுறையில் ஓரிரு சிறு விலகல்கள் இருந்தாலும் அவை இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வகையிலோ அல்லது இந்த கோர்ட்டு விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையிலோ அமையவில்லை.

ரபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்த ஒப்பந்தம் நீண்ட காலமாக பல்வேறு அரசாங்கங்களின் பரிசீலனையில் இருந்து உள்ளது. அதே நேரத்தில் இந்த விமானங்களின் தேவை குறித்து எந்தவிதமான சர்ச்சையும் இருந்தது இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்வது மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவது போன்ற கோரிக்கைகளை ஏற்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை.

மனுக்கள் தள்ளுபடி

விமானங்கள் வாங்குவது தொடர்பாக முடிவெடுத்தல், விலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தகுதியின் அடிப்படையில் ஆய்வு செய்துதான் இந்த கோர்ட்டு முன்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

எனவே, இந்த மறுஆய்வு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதால் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Next Story