மறுதேர்தலை பா.ஜனதா விரும்பவில்லை: சிவசேனா முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்பதை ஏற்க முடியாது அமித்ஷா பேட்டி


மறுதேர்தலை பா.ஜனதா விரும்பவில்லை: சிவசேனா முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்பதை ஏற்க முடியாது அமித்ஷா பேட்டி
x
தினத்தந்தி 14 Nov 2019 11:30 PM GMT (Updated: 14 Nov 2019 7:59 PM GMT)

சிவசேனா முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்பதை ஏற்க முடியாது என்றும், மராட்டியத்தில் மறுதேர்தல் நடத்துவதை பா.ஜனதா விரும்பவில்லை என்றும் அமித்ஷா கூறினார்.

புதுடெல்லி, 

சிவசேனா முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்பதை ஏற்க முடியாது என்றும், மராட்டியத்தில் மறுதேர்தல் நடத்துவதை பா.ஜனதா விரும்பவில்லை என்றும் அமித்ஷா கூறினார்.

முதல்-மந்திரி பதவி

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதாலும், அதை ஏற்க பா.ஜனதா மறுத்ததாலும் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

மராட்டிய ஆட்சியில் சமபங்கு என்பது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையின் போதே பா.ஜனதா தலைவர் அமித்ஷா முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா தொடர்ந்து கூறி வருகிறது.

இதை மராட்டிய பா.ஜனதா தலைவர்கள் மறுத்தபோதிலும், அமித்ஷா மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து அவர் நேற்று முதல் முறையாக மனம் திறந்தார். டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஏற்க முடியாது

பா.ஜனதா, சிவசேனா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்-மந்திரி என்று தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி பலமுறை கூறினார். நானும் குறைந்தது நூறு தடவையாவது கூறியிருப்பேன். இதை ஒருமுறை கூட சிவசேனா மறுக்கவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சிவசேனா புதிய நிபந்தனைகளை முன்வைத்தது. அது ஏற்க முடியாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் முதல்-மந்திரி பதவியில் பங்கு குறித்து தனது முன்னிலையில் பேசி முடிவு செய்ததாக சிவசேனா கூறி வருவதை அமித்ஷா தெளிவுப்படுத்தவில்லை.

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து அமித்ஷா கூறியதாவது:-

மறுதேர்தலை விரும்பவில்லை

ஆட்சி அமைக்க கவர்னர் 18 நாட்கள் கால அவகாசம் கொடுத்தார். ஆனால் யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. கவர்னர் அரசியலமைப்பு விதிமுறைகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் நடந்து கொண்டார். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மக்களின் அனுதாபத்தை பெறும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

சட்டசபைக்கு மறு தேர்தல் வருவதை நாங்கள் விரும்பவில்லை. ஆட்சி அமைக்க தற்போது 6 மாத அவகாசம் உள்ளது. போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story