சபரிமலை வழக்கில் வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பை மத்திய அரசு படிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து


சபரிமலை வழக்கில் வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பை மத்திய அரசு படிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 15 Nov 2019 9:08 AM GMT (Updated: 15 Nov 2019 10:30 PM GMT)

சபரிமலை வழக்கில் வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பை மத்திய அரசு படித்துப் பார்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் கூறினார்.

புதுடெல்லி,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவகுமாரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 3-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனுவை டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, அவர் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு அவருக்கு கடந்த மாதம் 23-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விசாரணையின் போது நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் அமலாக்கப்பிரிவு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் துஷார் மேத்தாவிடம் சில கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ப.சிதம்பரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அப்படியே காப்பி அடித்து உங்களுடைய இந்த மனு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவில் டி.கே.சிவகுமார் ‘முன்னாள் உள்துறை மந்திரி’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு குடிமகனை அரசு நடத்தும் சரியான முறை இதுவல்ல. மனுவை மிகவும் அலட்சியமாக தயார் செய்து இருக்கிறீர்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புடன் அரசு விளையாட முடியாது. சபரிமலை வழக்கில் நானும் (நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன்) நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டும் எழுதி உள்ள மாறுபட்ட தீர்ப்பு முக்கியமானது. அதை படித்துப்பாருங்கள். அரசாங்கத்திடமும் படிக்கச் சொல்லுங்கள். எங்கள் தீர்ப்புகள் என்றும் நிலைக்கும். இவ்வாறு நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் கூறினார்.

அவர் இவ்வாறு கூறியது கோர்ட்டு அறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அந்த மனுக்களை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய மூவரும் 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற ஆதரவாக தீர்ப்பு வழங்கி இருந்தனர். இது பெரும்பான்மை தீர்ப்பாக அமைந்தது.

ஆனால் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இருவரும், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தனர். அதை குறிப்பிடும் வகையில்தான், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் மேற்கண்டவாறு கூறினார்.


Next Story