சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வழியனுப்பு விழா


சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வழியனுப்பு விழா
x
தினத்தந்தி 15 Nov 2019 10:30 PM GMT (Updated: 15 Nov 2019 9:38 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வக்கீல் சங்கம் சார்பில் வழியனுப்பு விழா நேற்று நடைபெற்றது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெறுகிறார். அவர் நேற்று சுப்ரீம் கோர்ட்டு அமர்வுக்கு கடைசியாக தலைமை தாங்கினார். அவர் தனது 1-ம் எண் கோர்ட்டில் அமர்ந்து இருந்தார். அவருடன் அடுத்த தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.ஏ.போப்டேவும் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராகேஷ் கன்னா தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் சார்பில் அவருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. சங்க தலைவர் ராகேஷ் கன்னா வரவேற்றார். செயலாளர் (பொறுப்பு) பிரீத்திசிங், தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்பேரில் விழா யாருடைய பேச்சும் இன்றி நடைபெறும் என அறிவித்தார். பின்னர் சங்க நிர்வாகிகள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பூங்கொத்துகள் வழங்கினார்கள்.

மேடையில் அவருடன் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி என்.வி.ரமணா, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அனைத்து நீதிபதிகளும், வக்கீல்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ரஞ்சன் கோகாய் பத்திரிகையாளர்களுக்கு பொதுவாக 3 பக்க கடிதம் ஒன்றையும் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் உங்களது பேட்டி எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். எங்கள் நீதித்துறை செயல்பாட்டில் சாதாரண சுதந்திரம் சீராக கடைபிடிக்கப்பட்டதை நீங்கள் பாராட்ட வேண்டும். அத்தகைய சுதந்திரத்தை தள்ளும் நிலைக்கு சிலர் பேச்சு சுதந்திரத்தை வெளிப்படுத்தும்போது நீதிபதிகள் மவுனம் கடைபிடிக்க வேண்டியது உள்ளது.

அதற்காக நீதிபதிகள் பேசக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர்கள் பேச வேண்டும். ஆனால் அது செயல்பாட்டு தேவைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

விசாரணை நேரத்தில்கூட பெரும்பாலான பத்திரிகையாளர்கள் வதந்தி, பொய் ஆகியவற்றுக்கு புதிய தலத்தை உருவாக்காமல் தங்களது முதிர்ச்சியையும், பண்புகளையும் வெளிப்படுத்தினார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது பணியின் கடைசி நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள 650 ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் 15 ஆயிரம் நீதிபதிகள், அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசுகிறார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்படி நீதிபதிகளுடன் பேசுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

பின்னர் அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அக்டோபர் 3-ந் தேதி அவர் பதவி ஏற்றதும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story