அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து சட்ட ஆலோசனை - சன்னி வக்பு வாரியம் தகவல்


அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து சட்ட ஆலோசனை - சன்னி வக்பு வாரியம் தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:45 PM GMT (Updated: 15 Nov 2019 9:48 PM GMT)

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது தொடர்பாக சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளது.

லக்னோ,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் கடந்த 9-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதேநேரம் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் தனியாக வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது தொடர்பாக சன்னி வக்பு வாரியத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உள்ளன. எனவே வருகிற 26-ந்தேதி நடைபெறும் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. எனினும் இந்த விவகாரத்தில் இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் கருத்துகளை அறிய விரும்புவதாக வாரிய தலைவர் ஜுபர் பரூக்கி தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மசூதி கட்டுவதற்காக வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது தொடர்பாக வாரியத்துக்குள் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. எனினும் இந்த உலகுக்கு ஒரு செய்தியை வழங்குவதற்காக, அரசு தரும் நிலத்தில் மசூதி கட்ட வேண்டும் என பலரும் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) என்ன முடிவு எடுக்கிறது? என்பதை சன்னி வக்பு வாரியம் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இந்த வழக்கில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் ஒரு மனுதாரராக இல்லாவிட்டாலும், அவர்களின் கருத்தை அறிவது எங்களுக்கு முக்கியமாகும். ஏனெனில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்தான் நாட்டில் உள்ள முஸ்லிம் பிரிவினரின் உயர்ந்த அமைப்பு ஆகும்.

5 ஏக்கர் நிலத்தை ஏற்கும் விவகாரத்தில், தற்போது சட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதாவது இந்த நிலத்தை ஏற்காவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு ஆகுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு ஜுபர் பரூக்கி கூறினார்.

இதற்கிடையே 5 ஏக்கர் நிலத்தை ஏற்கும் விவகாரத்தில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் முடிவுக்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும், சன்னி வக்பு வாரியம் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது எனவும் பாபர் மசூதி நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளரும், மூத்த வக்கீலுமான ஜபர்யாப் ஜிலானி கூறியுள்ளார்.

இந்த நிலையில் முக்கியமான முஸ்லிம் அமைப்புகளில் ஒன்றான ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் அயோத்தி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் இதில் ஒருமித்த முடிவு எட்டப்படாததால், சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.


Next Story